×

பல்கலையில் கல்லா கட்டி மாஜி அமைச்சருக்கு வாரி கொடுத்த அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பருப்புல கை வைச்சாங்க, சாலை திட்டத்துல கை வைச்சாங்க.. அந்த இலை கட்சி கல்வி துறையை கூட விட்டு வைக்கவில்லை போல இருக்கே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர் பல்கலைக்கழகத்தில் இப்போது பூதாகரமான ஊழல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்து இருக்காம். பல்கலைக்கு தேவையான விண்ணப்பங்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை அச்சிட, காகிதம் வாங்கிய வகையில் இலைக்கட்சி ஆட்சியில் எதையுமே முறையாக டெண்டர் விடலையாம். எல்லாம் துறையின் மாஜி அமைச்சரின் ஆசியில் யார் அதிகளவு கமிஷன் கொடுக்கிறாங்களோ, அவங்களுக்கு ஆர்டர் கொடுத்து கரன்சியை அள்ளி இருக்காங்க. இந்த விஷயத்துல சில அப்பாவிகள் பலிகடா ஆக்கப்பட்டாங்களாம். அதாவது, அரசு துறையில் எந்த பொருள் வாங்க வேண்டும் என்றாலும் டெண்டர் விட வேண்டும் என்பது விதி. ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். எல்லாம் மாஜி அமைச்சரின் ஐடியா தானாம். என்ன வேண்டும் என்றாலும் வாங்கிக்கோ, எனக்கு மாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும். அதை கொடுத்துவிடு, பிரச்னை வந்தால் நான் பார்த்து கொள்கிறேன் என்று தைரியம் கொடுத்தாராம். அந்த தைரியம் தான் பல கோடி ஊழலுக்கு ஊக்குவித்துள்ளது. டெண்டர் விடாமல், அக்கட்சியை சேர்ந்த சிலரின் பினாமி நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்து, இதன் மூலம் பலரும் அடுத்தடுத்து பல கோடிக்கு கல்லா கட்டினாங்களாம். இதில் அப்போது பதவியில் இருந்த பல்கலை உயரதிகாரிகள், பர்சேஸ் பிரிவில் இருந்தவர்கள், இயக்குபவர்கள், செலவினங்களை பார்ப்போர், தேர்வு நடத்தியோருக்கும் சரியாக பங்கு பிரித்து கொடுத்தாங்களாம். அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி மாதா மாதம் மாஜி அமைச்சரை தேடி போய் உள்ளதாக, உண்மையான ஊழியர்கள் மத்தியில் அப்போதே ‘டாக்’ இருந்ததாம். இந்த விஷயம் தற்போது வெளிவந்து, இதுகுறித்த விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாம். இலைக்கட்சி காலத்தில் பல்கலை மூலம் வருவாய் பார்த்தவர்கள் வயிற்றில் இப்போது இந்த நடவடிக்கை புளியை கரைத்து கொண்டிக்கிறதாம். அத்தோடு, இதில் யார், யாரெல்லாம் சிக்குவார்கள் என பல்கலைக்கழக பகுதியில் ஒரு பட்டிமன்றமே நடக்குதாம். எல்லாம் மாஜி அமைச்சர் பார்த்து கொள்வார் என்கிறார்கள் தவறு செய்து பணத்தை சேர்த்தவர்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மன்னையை சேர்ந்த மாஜி மந்திரி மழை வெள்ளத்தை பார்க்காமல் தலைநகருக்கு பறந்துட்டாராமே, ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மயில் நடனமாடிய மாவட்டத்தில் இலை கட்சியினர் பலரும் வந்து பார்த்து சென்றபடி இருந்தனர். மன்னையை சேர்ந்த இலை கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்கேப் ஆகிட்டாராம். யார் வந்தாலும் நான் மழை சேதங்களை பார்க்க வர மாட்டேன் என்று ஒதுங்கிட்டாராம். அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் மழை வெள்ள சேதத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லையாம். யார் பக்கம் போனால் லாபம், யாருக்கு சின்னம் கிடைக்கும், யார் பக்கம் போனால் ஒன்றிய ஏஜென்சிகள் நம் பக்கம் பாயாது, உள்ளூர் அரசியலிலும் பட்டும் படாமலும் இருக்க வேண்டும் என்று கணக்கு போட்டு கொண்டு இருக்கிறாராம். என்ன இருந்தாலும் மன்னை மண்காரர் சின்ன மம்மியா இல்லை மாங்கனியார் பக்கமா என்பதில் கடிகார முள் போல ஆடிக் கொண்டே இருக்கிறாராம். இவர் ‘டபுள் கேம்’, ஆடுவதில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். மனுநீதி சோழன் மாவட்ட மாஜி அமைச்சர்களும் மழை சேதங்களை தங்கள் பகுதியில் சென்று பார்க்கவில்லையாம். இதற்கு எல்லாம் மன்னையை சேர்ந்த மாஜி அமைச்சர் தான் காரணம் என அவர் சார்ந்துள்ள அணியினர் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கூட்டுறவு சங்கங்களில் இலை கட்சியினர் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு இருக்காங்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகம்  முழுவதும் கடந்த 10 ஆண்டுகால இலை கட்சி ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் அந்த கட்சியினர் ஆடிய ஆட்டங்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளியில் வந்து பரபரப்பை கிளப்பி வருகிறது. அந்த வகையில் கூட்டுறவுத்துறையில் அமைச்சராக இருந்த தெர்மோகோல் பிரமுகர் ரயிலில் திருட்டுத்தனமாக வெயிலூர் பக்கத்துல இருக்கிற மிஸ்டர் வலமான ஊருல இருக்கும் தனது மனசுக்கு நெருக்கமான திருமணமானவர் கூட, ‘உல்லாச  உலகம் எனக்கே சொந்தம்னு பாட்டு பாடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தது பழைய கதை. அந்த பெண்மணி கூட்டுறவுத்துறையில என்ன முறைகேடு பண்ணி வைத்திருக்கிறார் என்பதே ரகசியமாக இருக்கும் நிலையில், இப்ப ஒவ்வொரு கூட்டுறவு சங்கமா வில்லங்க விவகாரங்கள் வெளியில் வந்து அந்த  துறை உள்ளூர் அதிகாரிகள் மத்தியில் திகிலை கிளப்பி வருகிறது. அப்படித்தான்  வெயிலூர் நகரில் பழைய பஸ் நிலையம் பக்கம் இருக்கிற கூட்டுறவு கடன்  சங்கத்துல தலைவராக இருந்த நல்ல பாம்பின் பெயருடன் ராஜா பெயரை கொண்டவர் பல லட்சங்களை பலரது பெயரில் கடனாக பெற்று சுருட்டிக் கொண்டாராம். அந்த கடன்  திரும்ப சங்கத்துல வந்து சேரலையாம். ஆட்சி மாறியதும் எங்கே நாம்  எல்லோரும் மாட்டிக்கொள்வோமே என்ற அச்சத்தில் போர்டு மீட்டிங் போட்டு ராஜாவை தகுதி நீக்கம் செஞ்சாங்களாம். அதோடு அதற்கான விசாரணையும் இப்ப நடந்து  வருதாம். அதுல குற்றம் நிரூபிக்கப்பட்டா பிரச்னை என்ற ரீதியில் நிலை இருக்கு என்று இலை கட்சியினர் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா….

The post பல்கலையில் கல்லா கட்டி மாஜி அமைச்சருக்கு வாரி கொடுத்த அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Galla Katti ,-minister ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி